Author: ஜோசப் பால்ராஜ்
•8:03 PM
பரபரப்பாகத்தான் இருக்கிறது இந்த பதிவுலகம்.

யார் செய்தது சரி, யார் செய்தது தவறு என சொல்லவோ, அந்த அரசியலுக்குள் செல்லவே நான் விரும்பவில்லை. சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய நபர்களிடம் நேரடியாகச் சொல்லிவிட்டேன். நண்பர்களுக்குள் ஆரம்பித்த இந்த பிரச்சனை இப்போது ஒட்டுமொத்தமாய் சுற்றி சுழன்று எல்லோராலும் கிழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்தப் பிரச்சனைகளை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வந்த வகையில் இதிலிருந்து நான் கற்றவையும் பெற்றவையும் .

1) பிறர் கருத்துக்களை விவாதத்தின் மூலம் யாராலும் மாற்றவே முடியாது.

வாதத் திறமையால் விவாதத்தில் வேண்டுமானால் வெற்றி பெறாலாமே ஒழிய, எந்த விவாதமும் பிறர் கொண்டுள்ள கருத்தை மாற்றிவிடாது. அவரவர் செய்வதை செவ்வனே செய்து கொண்டு தான் இருப்பார்கள். வாதத் திறன் விவாதங்களை தான் வெல்லுமே ஒழிய விவாதிப்பவரின் மனதை அல்ல.

2) எந்தப் பிரச்சனையையும் முற்றிலுமாகத் தீர்க்க இயலாது, ஒத்திப் போட வேண்டுமானால் இயலும்.
யார் இடையில் நின்று சமாதானம் செய்து வைத்தாலும், அந்த நேரத்தில் பிரச்சனையை தற்காலிகமாக தள்ளிப் போட முடியுமே ஒழிய அதை முற்றிலுமாக இல்லாதொழிக்க இயலாது

3) அடித்த ஆணிகளை வேண்டுமானால் பிடுங்கிவிடலாம், அடித்த தடம் அப்படியே தான் இருக்கும்.
சுவற்றில் அடித்த ஆணியை பிடுங்கிய பின்னும் ஆணி பதிந்து ஏற்படுத்திய தடம்
அப்படியே இருப்பதை போல தான் வார்த்தைகளும், பதிவுகளும். பதிவுகளை நீக்கலாம்
மன்னிப்பு கேட்கலாம், ஏற்படுத்திய பாதிப்புகளை அவை நீக்கிவிடுமா?

4) நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

எந்தப் பிரச்சனையா இருந்தாலும் இந்தக் குறளப் படிச்சுட்டு தீர்ப்பு சொல்ல போறது
ரொம்ப நல்லது. இல்லையா சும்மா இருக்கது நல்லது.

5) நட்புக்கு இலக்கணம் காயமாற்றுதல் தானே ஒழிய, எதிர் தாக்குதலுக்கு
துணை போவதும் தூண்டுவதுமல்ல.

என் நண்பன் ஒரு தாக்குதலுக்குள்ளாகி காயமுற்றிருக்கின்றான் என்றால், நான் அவனது
காயத்திற்கு மருந்திட்டு, அவனை குணமாக்க தான் முதலில் முயல்வேன். அந்த தாக்குதல்
தொடர்ந்து நடைபெறாதிருக்க என்ன செய்ய வேண்டும் என்றுதான் யோசிப்பேன்.
காயமுற்றிருக்கும் நண்பனை தூக்கிக் கொண்டு எதிர் தாக்குதலுக்கு செல்ல மாட்டேன்.
காயமுற்றிருக்கும் நண்பனாலும் தாக்குதலை திறம்பட நிகழ்த்த முடியாது.
நண்பனைச் சுமந்து கொண்டிருக்கும் என்னாலும் தாக்குதலில் முழுதாய் ஈடுபட முடியாது.
காயங்கள் ஆறியவுடன், இதெல்லாம் ஒரு தாக்குதலான்னு கூடத் தோணலாம்.
காயத்துடன் எதிர்வினை ஆற்றுதல் பாதிப்பை பலமடங்காக்குமே ஒழிய குறைக்க உதவாது.

உண்மையான நட்பு, நண்பன் தவறு செய்தாலும் ஆதரிக்கவே ஆதரிக்காது. நீ என்ன செஞ்சாலும்
சரி, நான் உன்னைய ஆதரிப்பேன் என்று சொல்வது உண்மையான நட்பு அல்லவே அல்ல.
திரி மேல் தவறே இருந்தாலும் அதே வழியில் செல்ல தன் நண்பனுக்கு உதவுவது
தான் உண்மையான நட்பென்றால், I am Sorry, I can't be a True Friend to Anybody.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
ஆனால் நடப்பவற்றை பார்க்கையில் கூடிக் கும்மாளவிடுவது மட்டுமே நட்பென்றாகிவிட்டதோ
என ஐயமுறச் செய்கின்றன
6) எல்லாப் பிரச்சனைகளிலும் எல்லோரும் கருத்து சொல்லியே
ஆகவேண்டும் என்பதில்லை
ரு பிரச்சனையென்றால் அதில் எல்லோரும் கட்டாயம் கலந்துக்கணும், கருத்து
சொல்லணும்னு எந்த நிர்பந்தமும் இல்லை. நம் சொற்கள் எரியும் தீக்கு எண்ணையாகுமா?
நீராகுமா? என உணராமல் சொல்வதில் எந்த அர்த்தமுமில்லை.

7) உண்மையான நடுநிலைவாதிகள் தங்கள் மெளனத்தைத் துறப்பதில்லை.
ண்மையான நடுநிலை என்பது மிக மிக அரிதானது. அப்படி அரிதிலும் அரிதாக இருக்கும்
நடுநிலையாளர்கள் மொளனம் துறப்பதில்லை. ஆனால் நான் நடுநிலையாளன் என
பேசுபவர்கள் 0.5 சதவீதமாவது ஏதாவது ஒரு பக்கம் சாய்ந்தவர்களாத்தான் இருக்கின்றார்கள்.

இன்னும் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்.

காற்று உள் சென்று வெளிவந்து கொண்டிருக்கும் வரை கற்றல் நிற்காது தொடரும்.

ஆனா பதிவு தான் வருமான்னு தெரியாது .

Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•9:33 PM
இரண்டு நாளைக்கு முன்னாடி பிரபலப் பதிவர், எழுத்தாளர், சிறுகதை ஆசிரியர் அன்பு அண்ணண் பரிசல் சிறு விபத்துக்குள்ளானார் என்பது எல்லாருக்கும் தெரியும். இப்ப அண்ணண் நல்லாருக்கார்.

முன்னால் சென்ற வாகனம் திடீரென நிறுத்தியதால், இவரது காரை இவர் நிறுத்த, பின்னால் வந்தவர் மட்டும் நிறுத்தாம இவர் காருல மோதினதால இவர் தல கண்ணாடியில இடிச்சு காயமாயிருச்சு. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர்ல இதே போன்று கார் திடீரென நிறுத்தப்பட்ட போது காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த “அண்ணண்” அப்துல்லா காரின் முன் கண்ணாடியில் தலை மோதி காயமடைந்திருந்தார். கார்ல இருக்கை பட்டைய( Seat Belt) மாட்டிக்கிட்டு பயணிச்சுருந்தா இந்த விபத்துகளை கண்டிப்பா தவிர்த்திருக்கலாமே. ஏன் அத யாரும் செய்ய மாட்டேங்குறீங்க? ( இதுல வெளிநாட்டுல இருந்து வர்றவய்ங்க, பழக்க தோசத்துல அந்தப் பட்டைய எடுத்து மாட்டீட்டா நம்மாளுங்க அடிக்கிற கிண்டல் இருக்கே, பல தடவ அனுபவிச்சுருக்கேன் நானு).

உமா சங்கர் ஐ.ஏ.எஸ் ஒரு முறை குடும்பத்தோட சென்னையில இருந்து திருச்சிக்கு கார்ல வர்றப்ப, அந்த கார் திருச்சிக்கு அருகே தலைகுப்புற கவிழுந்து பல்டியெல்லாம் அடிச்சுதாம். ஆனா அவர் மொத்த குடும்பத்துக்கும் ஒன்னுமே ஆகல, பத்திரமா வெளில வந்துருக்காங்க. காரணம் வண்டியில ஏறுனதும் எல்லாரையும் பெல்ட் போட்டே ஆகணும்னு கட்டாயமா சொல்லியிருந்தாராம் உமாசங்கர் ஐயா. இனியாவது இதை படிக்கிறவங்க, கட்டாயமா சீட் பெல்ட உபயோகப்படுத்துங்க. குறைந்தபட்சம் வாகனங்களில் முன் இருக்கைகளில் அமர்பவர்களும், வாகனத்தை ஓட்டுபவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து செல்லுங்கள்.

முன்பெல்லாம் சாலை சரியில்லாம விபத்துகள் நடந்துச்சு. இப்ப நல்ல சாலைகள் இருக்கு, ஆனா அத எப்டி உபயோகிக்கிறதுன்னு நம்மாட்களுக்கு தெரியலை.
மெதுவாக செல்லும் கனரக வாகனங்கள் சாலையின் இடபுற தடத்தில் தான் செல்ல வேண்டும் என்பது சாலை விதி. ஆனால் இதை எவரும் கடைபிடிப்பது கிடையாது. மிக அதிகளவில் பாரமேற்றப்பட்டு செல்லும் லாரிகள், டாட் ஏஸ், மினிடோர் போன்ற வாகனங்கள் கூட சாலையின் வலது தடத்தில் தான் செல்கின்றன. இவர்களை இடதுபுறமாக மற்றவர்கள் முந்திச் செல்கின்றார்கள். அதோடு நன்றாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் திடீரென குறுக்கே ஓடுபவர்களும் இன்னமும் இருக்கின்றார்கள். சாலை நன்றாக இருப்பதால் வேகமாக வாகனங்கள் செல்வதால் இது போல் குறுக்கே ஓடுபவர்களால் விபத்து ஏற்படுவதை தவிர்க்கவே இயலாது.

முதலில் 4 தடமுள்ள சாலைகளில் எப்படி வாகனங்களை ஓட்டுவது, யார் யார் எந்த தடத்தில் செல்லலாம் , எப்படி முன் செல்லும் வாகனத்தை முந்துவது, எப்படி ஒளி சமிக்கைகள் குடுப்பது என்பது குறித்து கட்டாயம் பயிற்சியளிக்க வேண்டும்.

முன் செல்லும் வாகனம் வலதுபுறம் திரும்பும் சமிக்ஞை(Right Indicator) குடுத்தால் பின்செல்லும் வாகனம் முன்செல்லும் வாகனத்தை முந்திக்கொள்ளலாம் என அர்த்தம் என எங்கள் வாகனத்தை ஓட்டியவர் சொன்னார். கேட்டதும் அதிர்ந்து போயிட்டேன்.

ஒரு வேளை என் போன்றவர்கள் வலது சமிக்ஞை போட்டுவிட்டு வலது தடத்திற்கு மாற முயற்சிக்கும் போது, பின்னால் வருபவர் முந்திக்கொள்ள அவருக்கு சமிக்ஞை கொடுத்ததாக எண்ணி வேகமாக வந்தால் கட்டாயம் விபத்து ஏற்படுவதை தவிர்க்க இயலாது. இதை என்னவென்று சொல்வது?
மிக கடுமையான பயிற்சிகள் வாகன ஓட்டிகளுக்கு தரப்பட வேண்டும். பயிற்சியளிப்பதோடு , அதை ஒழுங்காக கடைபிடிக்கின்றார்களா என கண்காணிக்கவும் வேண்டும். இது போன்ற வசதிகளை மட்டும் செஞ்சுட்டு அத எப்படி ஒழுங்கா உபயோகிப்பதுன்னு தெரியாம இருக்கது, தீவிரவாதிகிட்ட இருக்க அணுகுண்டு மாதிரி மிக ஆபத்தானது.

அடுத்து இருச் சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிவோர் , சிலர் கட்டாயத்தின் பேரில் தலைகவசம் அணிந்தாலும், அதில் உள்ள வாரை ஒழுங்காக மாட்டாமல் , ரொம்ப அலட்சியமா விட்டுட்டு போயிட்டு இருக்காங்க. ஒரு வேளை கீழே விழுந்தால் அந்த அதிர்சியிலேயே தலைக்கவசம் தனியே கழண்டு விழுந்துவிடும். தலைக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது.

இதே போல் ஒரு விபத்து ஏற்பட்டு என்றென்றும் அன்புடன் பாலா அவர்களின் அக்கா மகன், 27 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தது இது தான்
இந்தப் பதிவுக்கான காரணம்: ஆனந்த் விபத்து நிகழ்ந்தபோது, ஹெல்மட் அணிந்திருந்தான். ஆனால், ஹெல்மட் ஸ்ட்ராப்பின் (strap) பக்கிளை (buckle) போடாததால், ஹெல்மட் கழண்டு விட்டதாக விபத்தை நேரில் பார்த்த ஒரு கடைக்காரர் கூறினார்.

ஆகவே, பைக்கில் செல்பவர் ஹெல்மட் போட்டால் மட்டும் போதாது. ஹெல்மட் strap buckle ஐயும் சரியாக போட்டுக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். இவ்விடுகையை வாசிக்கும் (டூ வீலரில் பயணிக்கும்) நண்பர்களுக்கு இதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.
இது போல் பலர் அலட்சியமாக இருப்பதையும் காண நேரிடுகிறது. இதெல்லாம் தானா வரணும், வரலைன்னு சட்டம் போட்டாலும் இப்டி செய்யிறாங்க, உயிரோட மதிப்பு அரசாங்கத்துக்கு மட்டுமில்ல, தனி மனிதர்களுக்கும் தெரியலை. இதப் படிக்கிற பிரபலங்கள், பெரியாட்கள் யாராச்சும் தயவு செஞ்சு இதை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நடைமுறைப்படுத்த உதவுங்கள்.

சாலைப் பாதுகாப்பு குறித்து இயற்கை மகளின் அழைப்பின் பேரில் சஞ்செய் எழுதிய பதிவில் மேலே குறிப்பிட்டிருந்ததை பின்னூட்டமாக சொல்லியிருந்தேன். சஞ்செய் கூட படிச்சாரான்னு தெரியல.

கேபிள் சங்கர் அண்ணண் கேட்டிருந்தபடி கதிர் என்ற
சிறுவனுக்கு காது கேட்கும் கருவி வாங்க உதவிய அத்தனை உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. ஊர் கூடி தேர் இழுப்பது போன்றது இந்த நல்ல காரியங்கள் எல்லாம். மூன்றே நாட்களில் மொத்த தொகையையும் திரட்ட உதவிய அத்தனை நல் உள்ளங்களுக்கும், முக்கியமா எங்க சிங்கை அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி .

தம்பி கதிர் நல்லவற்றை கேட்டு, நன்கு படித்து, நல்லவனாய் வளர்ந்து, பலருக்கும் உதவ வாழ்த்துவோம்.


என்னைப் போலவே பதிவெழுதாப் பதிவராய் திறம்பட செயலாற்றி எனக்கு உற்ற துணையாய் இருந்த அண்ணண் வெண்பூ இன்னைக்கு திடீர்னு நானும் பதிவர்தாண்டான்னு சொல்லிட்டு ஜீப்ல ஏறிட்டாரு. வேற வழியே இல்லைல, அதான் இன்னைக்கு நானும் பதிவெழுதி ஜோதியில கலந்துட்டேன். மிஸ்டர். சஞ்செய், ப்ளீஸ் நோட் திஸ்.

இன்னும் ஒருத்தர் இருக்காரு, எல்லாரையும் அண்ணண் அண்ணணு கூப்புடுறதால தம்பியின் டைரிக்குறிப்புன்னு எழுதிக்கிட்டு இருந்தாரு, அவரு சீக்கிரம் டைரிக்குறிப்பு எழுதலைன்னா மேலும் பல பதிவுகளை நான் எழுதுவேன்னும் எச்சரிக்கிறேன்.
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•10:16 PM
வசூல்ராஜா MBBS திரைப்படத்தில் பல ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் ஒருவரை வைத்து மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்கள். அப்போது பாடம் எடுக்கும் மருத்துவ ஆசிரியர் சொல்வார், இது போன்ற கேஸ்கள் எல்லாம் நாட்டுக்கு வேஸ்ட் அப்டின்னு.

அதே கதாப்பாத்திரத்தைப் போலவே ஒரு நபர் உண்மையாகவே இருந்தால், அதுவும் 36 ஆண்டுகளாக மும்பை King Edward Memorial Hospital (KEM)ல் உள்ள ஒரு அறையிலேயே கண்கள் தெரியாது, சுய உணர்வின்றி, ஒரு கட்டிலில் படுக்கையிலேயே காலம் கடத்தி வருகிறார் என்பதை நீங்கள் அறிந்தால் உங்கள் மன உணர்சிகள் எப்படி இருக்கும்?

எந்த மருத்துவமனையில் தற்போது காலத்தை கடத்திவருகிறாரோ அதே மருத்துவமனையில் செவிலியராக பணிக்கு சேர்ந்து மிகத் துடிப்பாக தனது பணியை செய்த Aruna Shanbaug எனும் பெண்மணி தான் அந்த கோமா நோயாளி. அவரது இந்த நிலைக்கு காரணம் என்ன தெரியுமா? நேர்மை

1973 ஆம் ஆண்டு அருணா பணியிலிருந்த வார்டில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றிய சோகன்லால் வால்மிகி என்பவன், வார்டில் செய்த திருட்டு வேலைகளை கண்டித்ததாலும், அவரைப் பற்றி மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்தமையாலும் வெறி கொண்ட அந்த பொறுக்கி, அருணாவை பாலியல் பலாத்காரப்படுத்தி, நாய் கட்டும் சங்கிலியால் அவரது கழுத்தை நெரித்தமையால் அவரது மூளைக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் குழல்கள் நெரிக்கப்பட்டு அவரது கண் பார்வை பறிபோய், நரம்புகளில் ஏற்பட்ட கோளாறுகளால் கை, கால்கள் இழுத்து, சுய நினைவை இழந்து , தான் விரும்பிப் பணியாற்றிய மருத்துவமனையிலேயே 36 ஆண்டுகளாய், ஓரே அறைக்குள் மிக மோசமான நிலையில் வாடிக்கொண்டிருக்கிறார். அவர் இருக்கும் அறை ஒரு நாளைக்கு 5 முறை திறக்கப்படுமாம். கூழாக்கப்பட்ட உணவுகளை அவருக்கு கொடுத்து வருகின்றார்கள். மருத்துவர்கள் இனி எதுவும் செய்ய இயலாது என கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

அவரை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த பொறுக்கியின் மேல் திருட்டு, கொலை முயற்சி வழக்குகள் மட்டுமே தொடுக்கப்பட்டு அதிலும் 6 ஆண்டுகள் சிறை தண்டணை மட்டுமே பெற்று தற்போது விடுதலையாகி வெளியில் இருக்கிறான். பாலியல் பலாத்காரத்திற்கு வழக்கு தொடுக்கப்படவில்லை. ( அப்படியே வழக்கு தொடர்ந்திருந்தாலும் 10 ஆண்டுகள் தான் தண்டணையாம்). ஒரு திருட்டு பொறுக்கிக்கு 6 ஆண்டு தான் தண்டணை. ஆனால் நேர்மையாய் இருந்த ஒரே காரணத்திற்காக அருணாவிற்கு கிடைத்தது 36 ஆண்டுகள் நரக வாழ்க்கை.

பிங்கி எனும் ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகம் எழுதிய பின்னர் தான் அருணாவைப் பற்றியே வெளியில் தெரிந்தது. இப்போதும் அந்த எழுத்தாளர் தான் உச்ச நீதிமன்றத்தில் அருணாவை கருணை கொலை செய்ய அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

சமீபத்தில் வலை உலகில் பல விவாதங்கள் சூடுபறக்கின்றன. இப்போது இங்கே விவாதிப்போம் .

வாழ்வு ஒரு தண்டணையாகும் போது மரணம் தான் விடுதலை என கருணை கொலை செய்ய அனுமதிக்கலாமா? அல்லது ஆண்டவன் கொடுத்த உயிரை எடுக்கும் உரிமை நமக்கில்லை என்று அவரை விட்டுவிடலாமா?

என்ன தீர்ப்பு வழங்க இருக்கிறது நமது மாண்புமிகு உச்ச நீதிமன்றம் என தெரியவில்லை. நீங்கள் என்ன தீர்ப்பு வழங்குவீர்கள் என சொல்லுங்கள்.

ருச்சிகா - இவரும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்மணி தான். ஆனால் இவரது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஹரியான மாநிலத்தின் காவல் துறை தலைவராக (DGP) இருந்த S.P.S. ரத்தோர்.

1990 ஆம் ஆண்டு 14 வயதே ஆனா டென்னிஸ் வீராங்கனையான ருச்சிக்காவை பாலியல் கொடுமைக்கு உட்படுத்திய இந்த காவல்துறை அதிகாரியின் மீது ருச்சிகா புகார் அளித்தமையால் அவரும் அவர் குடும்பமும் அடைந்த வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவரும் அவரது சகோதரரும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார்கள், அவரது சகோதரர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டார். குடும்பமே கடுமையான வேதனைகளை அனுபவித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக 3 ஆண்டுகள் போரடி அலுத்துப் போன அந்தச் சின்னப் பெண், நமது சட்டங்களினால் எந்தப் பாதுகாப்பையும் அடைய இயலாது, எந்த பரிகாரத்தையும் பெற இயலாது, அதிகாரவர்கத்தை எதிர்த்து போரடும் வலுவிழந்து, தற்கொலை செய்து கொண்டார் என்பது உச்சகட்ட சோகம்.

1990 ஆண்டு நடந்த பாலியல் கொடுமை, 1993ல் அதிகாரவர்கத்தின் ஆணவத்தால் தற்கொலை என இந்த சம்பவங்கள் நடந்து 19 ஆண்டுகள் கழித்து ஒரு வழியாக நமது கண்ணியமிக்க சட்டம் தனது கடமையை செய்து முடித்து எந்த தண்டணையுமின்றி பதவியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட ரத்தோருக்கு ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டணை அளித்து தீர்பளித்துள்ளது. ( அன்றே ஜாமீன் வாங்கிக்கொண்டு வெளியில் வந்துவிட்டார் அந்த புண்ணியவான்). இத்தனைக்கும் ருச்சிக்காவின் தோழி ஒருவரது குடும்பத்தினர் தான் இந்த வழக்கை தொடர்ந்து நடத்தப் போராடி இந்த நீதியைக் கூட பெற செய்தவர்கள். தங்கள் மகளை இழந்து, தற்போது ஊரை காலி செய்துவிட்டு வேறிடம் சென்றுவிட்டார்கள்.

தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்றெல்லாம் வாய்கிழிய வக்கணையாக பேசிட்டு போறது தானே நம்ம ஊரு நீதி. 1990 ஆண்டு நடந்த கொடுமைக்கு 1993க்குள் சரியான முறையில் விசாரனை நடத்தி கடுமையான தண்டணை வழங்கப்பட்டிருந்தால் அந்த அப்பாவி பெண் தன் உயிரை மாய்த்துக்கொண்ட்ருக்க வேண்டியதில்லை. தயவு செய்து கோழைத்தனமாக அந்தப் பெண் தற்கொலை செய்து விட்டார் என யாரும் சொல்லிவிடாதீர்கள். கோழையாய் இருந்திருந்தால் 1990 ஆம் ஆண்டே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம், மூன்றாண்டுகள் போராடி பல சோகங்களை அனுபவித்து இனி செய்ய எதுவுமில்லை என்ற நிலையில் தான் தன் உயிரை மாய்த்துக்கொண்டிருந்திருக்கின்றார் அந்தப் பெண்.

சிபிஐ விசாரணை நடத்திதான் இந்த 6 மாத தண்டணையையே அவருக்கு வாங்கித்தர முடிந்திருக்கின்றது. இந்த வழக்கில் ஒரு மைனர் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய குற்றம் ரத்தோர் மீது சேர்க்கப்படவில்லை. அந்தக் குற்றச்சாட்டும் சேர்கப்பட வேண்டும் என கூறிய சிபிஐ அதிகாரி ரத்தோரால் மிரட்டப்பட்டு , அந்த வழக்கின் விசாரணையில் இருந்து நீக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

இப்ப 19 வருசம் இழுத்த இந்த வழக்கை மாடல் வழக்காக எடுத்துக்கொண்டு, மறு விசாரணை நடத்தி குற்றம் சாட்டப்பட்ட ரத்தோர், அவருக்கு உதவிய அதிகாரிகள், ருச்சிகா மற்றும் அவரது சகோதரரை பள்ளியில் இருந்து நீக்கியவர்கள், ருச்சிகாவின் சகோதரர் மீது பொய் வழக்கு போட்டு காவலில் வைத்தவர்கள் என அனைவரையும் தண்டிக்கப் போவதாக நமது மத்திய சட்ட அமைச்சர் திரு. வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். ( எனக்கு ஒரு பிள்ளை பிறந்தவுடன், அவன்/அவளிடம் சொல்லி இந்த மாடல் வழக்கின் விசாரணையை ஃபாலோ அப் செய்ய சொல்ல வேண்டும், இந்த வழக்கின் முடிவை அவர்கள் கட்டாயம் பதிவாக எழுதவும் சொல்ல வேண்டும்)

ஆந்திராவுல கவர்னரா இருந்த என்.டி. திவாரி அடுத்த ஹீரோ. இவரு மேல பல பாலியல் புகார்கள் இருந்த போதிலும் எப்படி இவருக்கு போயி கவர்னர் பதவியெல்லாம் குடுத்தாங்கன்னு தெரியலை.

அருணா ஷான்பேக், ருச்சிகா இவர்களின் வாழ்வை கெடுத்தவர்களுக்கு என்ன தண்டணை சரியா இருக்கும் ?
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•1:54 AM
தற்சமயம் பலரது பதிவுகளும் வைரஸ்களால் பாதிக்கப்பட்டு வலைப்பூக்களே முடக்கப்பட்டு வருவதாக தினமும் செய்திகள் வருகின்றன.

அதிலும் உண்மைத் தமிழன் அண்ணணது வலைப்பூவும், அன்புத் தங்கை தூயாவின் வலைப்பூவும் முடங்கியுள்ளதாக கேள்வியுற்று பெரிதும் அதிர்ந்தேன்.

என்னைய மாதிரி ஆளுங்கண்ணா பரவாயில்ல, பாவம் உ.த அண்ணண், அவரு எழுதுன பதிவுகளையெல்லாம் திரும்ப எழுதனும்னு நினைச்சா எவ்ளோ கஷ்டம்? அதான் என்னடா செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன் . அப்ப நம்ம வால்பையன் அண்ணாச்சி ஒரு மெயில் அனுப்சாரு. பதிவுகள்ல இருக்கத பாதுகாப்பா ஒரு பிரதி எடுத்து(back up) வைச்சுக்க உதவும் மென்பொருள் பத்தி சொல்லியிருந்தாரு. அந்த மென்பொருள் exe கோப்பா இருப்பதால் மின்னஞ்சல் வாயிலாக அனுப்புவதில் சிரமம் உள்ளதென சொன்னார்.

தற்போது உங்களனைவரின் நலனுக்காக நான் அதை பொது சேமிப்பு தளமான esnips.com எனும் தளத்தில் அந்த கோப்புகளை சேமித்து வைத்துள்ளேன். தேவைப்படுவோர் அதை இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். தரவிறக்கம் செய்ய சிரமமிருப்பின் எனது மின்னஞ்சல் முகவரிக்கு (joseph.paulraj@gmail.com) தெரியப்படுத்துங்கள்.

Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•6:58 AM

அன்பு சொந்தங்களே,
பிரபலப் பதிவரும், எனதருமை நண்பணுமாகிய குசும்பன், அக்டோபர் திங்கள் 20 ஆம் நாள் அதிகாலை இந்திய நேரம் 4.15 மணிக்கு அழகிய ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். தங்கச்சியும், குட்டி குசும்பனும் மிக்க நலமாக உள்ளார்கள் .

குசும்பனைத் தொடர்பு கொள்ள : +91-9585161266

அன்புடன்,
ஜோசப் பால்ராஜ்.
Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•9:59 PM
இந்தத் தொடர் விளையாட்டில் என்னையும் அழைத்த அண்ணண் நர்சிம் அவர்களுக்கு என் அன்பான நன்றிகள்.

ஆறு, குளம், குட்டை, வாய்கால் என எல்லாப் பெயர்களையும் எனக்கு முன்னரே தம் வரலாறு கூறிய பெருமக்கள் எடுத்தாண்டுவிட்டமையாலும், அந்தப் பெயர்களை உபயோகிக்குமளவுக்கு நான் பெரியவன் இல்லையென்பதாலும் சிறுதுளி என்று தலைப்பிட்டுள்ளேன். ( தலைப்புக்கு விளக்கம் குடுக்கனும்ல?)

2006ல் சிங்கை வந்த போது தான் எனக்கு கூகுள் நிறுவனம் அளிக்கும் வலை சேவையே தெரியவந்தது. உடனே நிறைய எழுதனும்னு முடிவெடுத்து ஒரு வலைப்பூ துவங்கினேன். எனக்கு தெரிஞ்ச ஓட்டை ஆங்கிலத்தில எழுதுனேன். சிங்கையில் வேலையில் சேர்ந்ததும் மெயில் அனுப்ப கூட நேரமில்லாம போனதால தொடர்ந்து எழுத முடியல. நல்ல வேளை இப்ப அந்த வலைப்பூ முகவரி கூட எனக்கு தெரியாது. ( எல்லாரும் தப்பிச்சுட்டிங்க) .

2007ல தமிழ் தட்டச்சுக்கு ஈ-கலப்பை அப்டின்னு ஒரு மென்பொருள் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு அத வைச்சு ஆரம்பிச்சதுதான் இப்ப இருக்க இந்த வலைப்பூ. 2007ல ஆரம்பிச்சு ரொம்ப பொறுப்பா 5 பதிவு எழுதுனாலும் அப்ப எனக்கு தமிழ்மணம் போன்ற திரட்டிகளப் பத்தி தெரியாது. அதுனால மறுபடியும் ஒரு இடைவெளி விட்டாச்சு.

2008ல ஆனந்த விகடன்ல வரவேற்பரையில் ஆசிப் அண்ணாச்சியோட வலை குறித்து எழுதியிருந்தது பார்த்து, அவரோட வலைப்பூவுக்கு போயி அவரோட பதிவுகளப் படிச்சேன். அவரு பதிவுல பல இடங்கள்ல தமிழ்மணம் அப்டிங்கிற பெயர் இருந்துச்சு. அது என்னத் தமிழ்மணம் அப்டின்னு பார்க்க போயி , அப்டியே புடிச்சு வந்துட்டேன் உள்ளற. ( ஒரு வழியா நாமளும் ரவுடி தான்னு ஜீப்ல ஏறியாச்சு)

அந்த காலகட்டத்தில சிங்கையில் நடந்த பதிவர் சந்திப்புக் குறித்து கோவியார் எழுதியிருந்தார். அதப் பார்த்துட்டு ரொம்ப மகிழ்சியாயிருச்சு. தனிமையில போரடிச்சுக் கிடக்கோமே, நமக்கு இங்க ஒரு கூட்டம் இருக்குடான்னு முடிவு பண்ணிட்டு ஒட்டகம் கூடாரதுக்குள்ள நுழைஞ்ச மாதிரி கூட்டத்துல இணைஞ்சுட்டேன். ( இப்ப கூடாரத்துல நடுவுல இருக்கோம்னு நான் சொல்லித் தான் தெரியனுமா என்ன? )

இங்க ஒரு முக்கியமான விசயத்த சொல்லனும். சிங்கையில எந்தப் புதிய பதிவர் எழுத ஆரம்பிச்சாலும், அவங்கள தொடர்பு கொண்டு, ஊக்கப்படுத்தி, சந்திச்சு, அவங்களையும் அடுத்த பதிவர் சந்திப்புக்கு கூட்டிவந்து எல்லோருடனும் இணைத்து மகிழச் செய்யும் சீரியப் பணியை கோவி.கண்ணண் மிகச் சிறப்பா செஞ்சுகிட்டு இருக்கார். சந்திப்புகளுக்கெல்லாம் செல்லும் முன்னரே ஒரு முறை நான் அவரோட தொலை பேசியில் உரையாடினேன். அடுத்த வார இறுதியிலேயே என் இல்லம் வந்து சந்தித்து சென்றார். சிங்கைப் பதிவர்களப் பத்தி சொல்லனும்னா அதையே ஒரு தொடரா எழுதணும். இங்க இருக்கது பதிவர் குழுமம் இல்ல, இது பதிவர் குடும்பம். (இதுக்கு மேல என்னத்த சொல்ல? )

பெருசா ஒன்னும் எழுதி கிழிக்கலைன்னாலும், பதிவுலகத்துக்கு வந்தமையால் பல அன்பு உள்ளங்களின் நட்பு கிடைத்தது நான் அடைந்த பெறும் பேறு. என் கூட முதுகலையில் ஒன்றாகப் படித்தவரும், தற்போதைய பிரபலப் பதிவருமாகிய குசும்பன் அவர்களைக் கூட மீண்டும் தொடர்பு கொள்ள உதவியது பதிவுகள் தான்.
சுருக்கமா சொல்லனும்னா, நமக்கு உலகம் பூர சொந்தக் காரங்க இருக்காங்கன்னு சொல்லிக்க வைச்சுருக்கு இந்தப் பதிவுலகம்.

தொடர்ந்து எழுதாமலேயே பதிவர்னு சொல்லிக்கிட்டு திரியிறேன். பார்ப்போம், இந்த சிறு துளி பல துளிகளா பல்கிப் பெருகுதா, இல்ல அப்டியே ஒரு துளியாவே நிக்குதான்னு.

இந்த தொடர் விளையாட்டுக்கு நான் அழைக்கும் சொந்தங்கள்


Links to this post
Author: ஜோசப் பால்ராஜ்
•2:20 PM
நேற்றைய அறுவை சிகிச்சைக்குப் பின் மயக்கத்தில் இருந்த செந்தில் நாதன் அண்ணண் தற்போது கண்விழித்து விட்டார். அவரது மனைவி சென்று பார்த்துள்ளார்.

உலகெங்கிருந்தும் தங்கள் அன்பையும், வாழ்த்துக்களையும், பிரார்தனைகளையும் தெரிவித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் அன்புடனும், ஆதரவுடனும், மாற்று இதயம் கிடைத்ததும் இதய மாற்று அறுவை சிகிச்சையையும் இதேபோல் வெற்றிகரமாக செந்தில் நாதன் கடந்து முழுமையாக குணமடைவார். தொடர்ந்து உங்கள் உதவிகளையும், அன்பையும், வேண்டுதல்களையும் யாசிக்கிறோம்.
Links to this post
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க